மானாமதுரை, ஆக.26: மானாமதுரை அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஏராளமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கடந்த ஜூலை 11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துவக்கி வைக்கப்பட்ட இந்த திட்டமானது தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல நேற்று மானாமதுரையில் இந்த முகாம் நடந்தது. முகாமில் மானாமதுரை வட்டாரத்திற்குட்பட்ட கல்குறிச்சி, செய்களத்தூர், சூரக்குளம் பில்லறுத்தான் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரகவளர்ச்சித் துறை, மகளிர் திட்டம், காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு ஆன்லைன் மூலம் அதற்கான தீர்வுகள் காணப்பட்டது.
இதில் பட்டாமாறுதல், மகளிர் திட்டம், மருத்துவ துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளின் கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டது. பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு தீர்வுகாணப் பட்டு பயனாளிகளுக்கான சான்றுகளை மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் வழங்கினார். முகாமில் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார், மானாமதுரை ஒன்றியக்குழு தலைவர் லதாஅண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.