கோவில்பட்டி, ஆக. 22: ஒன்றிய அரசின் திட்டங்கள் விளம்பரத்தில் மட்டும்தான் இருக்கும். மக்களுக்கு வந்து சேராது என்று கனிமொழி எம்பி குற்றம்சாட்டினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மூப்பன்பட்டி, தோணுகால், சத்திரப்பட்டி, ஊத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் களம் என்ற தலைப்பில் மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மனுக்களையும் பெற்றுக்கொண்டார். பின்னர் கனிமொழி எம்பி பேசுகையில், திமுக ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், முன்மாதிரியான திட்டங்களை உருவாக்கி தந்து இருக்கிறோம். தமிழக அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை பார்த்துதான் ஒன்றிய அரசு அந்த திட்டத்தை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது.
ஒன்றிய அரசு திட்டங்களை எப்படி செயல்படுத்துவார்கள் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, ஒன்றிய அரசு ஒன்றை செய்துவிட்டதாக சொல்வார்கள். ஆனால் அது விளம்பரத்தில் மட்டும்தான் செய்வார்கள், மக்களிடம் வந்து சேராது. ஆனால் திமுக சொல்வதை செய்யும். மக்கள் பயன்படுத்தும் வகையில் செய்து காட்டுவோம். எந்த வாக்குறுதியை திமுக தந்தாலும், அதை செய்து முடிக்கும். அன்று வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நிறைவேற்றினார். இன்று குடும்ப தலைவிக்கு மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த திட்டம் செப்டம்பரில் நடைமுறைப்படுத்தப்படுகிறது, என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, திமுக மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சந்தானம், பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராமர், பீட்டர், சிவசுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி தாமோதரகண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் மாரீஸ்வரன், மாரிசாமி மற்றும் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.