மானாமதுரை, நவ.18: மானாமதுரையில் மதுபானக் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தி விடுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மானாமதுரை புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் ரயில்வேகேட் அருகே ராமேஸ்வரம்-மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடை அருகே தனியார் பள்ளி, பேருந்து நிலையம், திருமண மண்டபம், மருத்துவமனைகள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
ராமேஸ்வரம்,மதுரை சுற்றுலா செல்லும் சிலர் இங்கு மது அருந்தி விட்டு செல்கின்றனர். மேலும் பார்கிங் வசதி இல்லாத காரணத்தினால் குடிக்க வரும் மதுப்பிரியர்கள் தங்களது கார்,பைக்குகள் அனைத்தையும் சர்வீஸ் சாலையில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகள் இந்த சாலையில் வருவதில்லை. மற்றொருபுறம் செல்லும் சாலையை வருவதற்கும் போவதற்கும் மக்கள் பயன்படுத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
இதனால் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள், சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜா கூறுகையில், மதுப்பிரியர்கள் அடிக்கடி சண்டையிடுவது முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்கின்றார்கள். விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருப்பதால் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் பெண்கள் நடமாட அச்சமாக உள்ளது. எனவே இந்த மது கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார்.