கன்னியாகுமரி: மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை ஒட்டி பல்வேறு மலர்சந்தைகளில் பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், ஓசூர் என பல பகுதிகளில் இருந்தும், உள்ளூரில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வரும் இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரளாவுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பப்படும். சிவராத்திரியையொட்டி சிவன் கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தபடும் தாமரை மற்றும் வில்வ மலர்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தாமரை பூ ஒன்று ரூ.5 விற்பனையான நிலையில் தற்போது ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. ரூ.50 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வில்வ மலரின் விலை ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. நாளை முதல் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக பனிப்பொழிவு காரணமாக பூக்கள்வரத்து குறைந்துள்ளது. மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையையொட்டி மலர்கள் தேவை அதிகரித்துள்ளதால் நிலக்கோட்டை கொடைரோடு பூ சந்தைகளில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக அரளி பூ சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அரளி 350 முதல் ரூ.400க்கு விற்பனையாகிறது. சம்பங்கி ரூ.500 க்கும் மல்லிகை ரூ.1600க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ முல்லை ரூ.1550க்கும், பிச்சிப்பூ மற்றும் ஜாதி பூ ரூ.1300க்கும், ரோஜா பூ ரூ.150கும் விற்பனை செய்யப்படுகின்றன. …