வந்தவாசி, நவ. 13: வந்தவாசி அருகே பணம் தர மறுத்ததால் மகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்ற மருமகனை கட்டையால் அடித்து கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன்(65). இவரது இளைய மகள் ருக்கு(30). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியானூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(35) என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கல் உடைக்கும் தொழில் செய்து வரும் ராஜா ஆலத்தூர் கிராமத்தில் சகாதேவனின் வீட்டின் அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வந்தார். கிடைக்கும் பணத்தில் மது அருந்திவிட்டு, அடிக்கடி வேலைக்கு செல்லாமல் தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். அதோடு கூலி வேலைக்கு செல்லும் மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்த ருக்குவிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. அப்போது ருக்குவை கொல்ல அவர் மீது ராஜா பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது. இதில் அலறி துடித்த ருக்குவை அக்கம் பக்கத்தினர் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததை அறிந்து ஆத்திரத்தில் வந்த ருக்குவின் தந்தை சகாதேவன், மருமகன் ராஜாவை உருட்டுக்கட்டையால் தலைமீது தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜா பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை சகாதேவனை கைது செய்தனர். மகளை தீ வைத்து எரித்த மருமகனை, மாமனார் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.