அம்பத்தூர்: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாய் கொடுத்த புகார் மீதான வழக்கில், குற்றத்தை நிரூபிக்காததால், கணவரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர், இசை குழு நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் இசை குழுவில் பாட வந்த வனிதா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சேகரிடம் விவாகரத்து கேட்டு வனிதா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவரம் தெரிந்தவுடன் வழக்கை வாபஸ் பெறுமாறு சேகர் வற்புறுத்தியுள்ளார்.
இதுபற்றி வனிதா, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் தனக்கு, முன்பே திருமணம் நடந்ததை மறைத்து 2வதாக என்னை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். எங்களுக்கு பிறந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். மேலும், எனது உழைப்பில் வந்த பணத்தை எல்லாம் பறித்துக்கொண்டு, மேலும் பணம், நகை கேட்டு கொடுமைப்படுத்துகிறார் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, சேகர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு போக்சோ வழக்குகளுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. சேகர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி வாதிடும்போது, புகார்தாரர் உயர் ஜாதியை சேர்ந்தவர். சேகரை திருமணம் செய்ததால் அவர் சார்ந்துள்ள சமூதாயத்திற்கு கிடைக்கும் அரசு பலன்களை வனிதா அனுபவித்துள்ளார். பொய்யான புகாரை கொடுத்ததுடன் பண பரிமாற்றத்தை காரணம் காட்டி வேறு ஒருநபரையும் இணைத்து புகார் கொடுத்துள்ளார். அந்த நபரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், 2வதாக சேர்க்கப்பட்ட நபரிடம் பணத்தை செட்டில் செய்தால் சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெறுவதாகவும், சாட்சி விசாரணையில் அவருக்கு சாதகமாக சாட்சி சொல்வதாகவும் ஒப்பந்தம் செய்துள்ளார். ஏற்கனவே, பல புகார்களை சேகருக்கு எதிராக கொடுத்துள்ள புகார்தாரர் இறுதியாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொய்யான புகாரை கொடுத்துள்ளார் என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகளை சாட்சிகள் மூலம் அரசு தரப்பு நிரூபிக்கவில்லை. எனவே, குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பளித்தார்.