கூடலூர், மார்ச் 10: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் சிறப்பான செயல்பாடுகளை கொண்ட மகளிர் குழுக்களுக்கு பாராட்டு, விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கூடலூர் சாஸ்தாபுரி அரங்கில் நேற்று நடைபெற்றது. சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேவர் சோலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி குமாரி, கால்நடை மருத்துவர் நந்தினி, இந்திய பல் மருத்துவர் சங்க உறுப்பினர் மருத்துவர் ஐஸ்வர்யா, கூடலூர் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் லட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கீழ் நெலாக்கோட்டை மற்றும் ஸ்ரீ மதுரை பகுதிகளில் இயங்கி வரும் 60 மகளிர் குழுக்களில் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சமூகப் பணிகள் ஆகியவற்றில் திறமையாக செயல்பட்ட 9 மகளிர் குழுக்கள் அறக்கட்டளையின் மத்திய குழுவால் ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. இவர்களுக்கான விருதுகளை சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.