சேலம், ஜூன் 18: மாநில அளவிலான மகளிருக்கான கைப்பந்து போட்டி, கோவையில் கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் தலைசிறந்த ஆறு அணிகள் பங்கேற்றன. இதில் சேலம் ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி கோப்பையை வென்றது. போட்டியில் கோப்பையை வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா, சேலம் பிருந்தாவன் ரோட்டில் உள்ள சேலம் மாவட்ட கைப்பந்து கழக அலுவலகத்தில் நடந்தது.
விழாவுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்து, கோப்பையை வெற்ற வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். விழாவில் செயலாளர் சண்முகவேல், ஆலோசகர் விஜய்ராஜ், துணை செயலாளர் ஹரிகிருஷ்ணன், பயிற்சியாளர் பரமசிவம், நிர்வாகிகள் அருள்சர்மா, அப்புராஜ், குஜராத் மாநிலத்தின் வருமானவரித்துறை அதிகாரி பவித்ரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.