சென்னை, செப்.2: கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோடம்பாக்கம் பகுதியில் பிரபல தனியார் மகளிர் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு மிரட்டல் வந்துள்ளது.
இதுபற்றி உடனே கோடம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் கல்லூரிக்கு வந்து தீவிர சோதனை நடத்தினர். ஆனால் எந்த வெடி குண்டுகளும் சிக்கவில்லை. இதனால் இது வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள பிரபல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை ஒன்றிய உள்துறையிடன் இணைந்து இன்டர்போல் போலீசார் உதவியுடன் மர்ம நபர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.