திருப்போரூர், ஆக.29: திருப்போரூர் கிரிவலப்பாதையை சேர்ந்தவர் ரஞ்சனி (40). இவரது, கணவர் சீனிவாசன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர், மகன் கார்த்திக் (18), மகள் சுவாதி (16) ஆகியோருடன் திருப்போரூரில் வசித்து வந்தார். மகன் கார்த்திக் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். குடும்ப செலவுக்கு போதிய வருவாய் இல்லாததாலும், ஒரே மகன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டதாலும் மனமுடைந்த நிலையில் ரஞ்சனி இருந்துள்ளார். இந்நிலையில், மகள் சுவாதி நேற்று காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்றுவிட்டார். அவருக்கு, மதிய உணவை கொடுத்து அனுப்பாததால் பள்ளியில் அனுமதி பெற்று வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டினுள் ரஞ்சனி தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, தனது தாத்தாவிற்கு தகவல் தெரிவித்த சுவாதி, திருப்போரூர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரஞ்சனியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.