பெங்களூரு: ேதர்தலில் சீட் ஒதுக்கீடு தொடர்பாக மகன்களுக்கு இடையிலான மோதலுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவ கவுடா (89), வயது மூப்பின் காரணமாக கடுமையான முழங்கால் வலி மற்றும் வயது தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு கோவிட் மற்றும் அது தொடர்பான நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளேன். எந்த வித பீதியோ, பதட்டமோ அடைய தேவையில்லை. ஓரிரு நாட்களில் மீண்டும் வீடு திரும்புவேன்’ என்று கூறியுள்ளார். மேலும் அவரது மகனான முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி வெளியிட்ட பதிவில், ‘எனது தந்தை உடல்நலப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது நலமுடன் உள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். இருந்தும் கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியானது, 93 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்டது. ஹாசன் தொகுதியில் தனது மனைவி பவானிக்கு சீட் வழங்க வேண்டும் என்று ரேவண்ணா (தேவ கவுடாவின் மூத்த மகன்) கேட்டு வருகிறார். இதற்கு குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக தேவ கவுடா குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….