ேகாவை, ஜூன் 6: கோவை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையினால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிறுவாணி, பில்லூர் அணைகள், குளம், குட்டை ஆகியவை நிரம்பியது. மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவி வந்தது. தொடர்ந்து கடந்த 30-ம் தேதி முதல் மழை குறைந்தது. பின்னர், ஜூன் 1ம் தேதி முதல் வெயில் தாக்கம் காணப்பட்டது. அதன்படி, மாநகரில் பகல் நேரத்தில் 86 டிகிரி வரை வெப்பநிலை நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வெப்பநிலை சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது.
அதன்படி, கோவையில் நேற்று 90 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இருப்பினும், இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசிவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ள நிலையில், கோவையில் 90 முதல் 92 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கும் எனவும், 8-ம் தேதி மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.