தேவகோட்டை, நவ.10: தேவகோட்டை கண்ணாடியார் வீதியில் வசித்து வருபவர் சாலைமணி. மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மீனாம்பாள்(72). இவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் திருச்சியிலும், மற்றொருவர் அமெரிக்காவிலும் உள்ளனர். கடந்த 7ம் தேதியன்று வெள்ளையன் ஊரணி தெற்கு திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி வீதியை நோக்கி மீனாம்பாள் வந்தார்.
வீதியில் நடமாட்டம் இல்லாமல் இருந்தபோது டூவீலரில் வந்த இரண்டு வாலிபர்கள், தங்களை மூதாட்டியிடம் போலீஸ் என அறிமுகம் செய்து கழுத்தில் இவ்வளவு பெரிய நகையை அணிந்து கொண்டு வரலாமா. திருட்டு சம்பவம் அதிகமா நடக்கிறது. நகையை கழற்றி பர்சில் வையுங்கள் எனக்கூறி நகைகளை வாங்கி பர்சில் வைத்துக்கொடுத்தனர். வீட்டிற்கு வந்து பர்சை திறந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை. அப்போது தான் தான் ஏமாந்தது தெரியவந்தது. தேவகோட்டை டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.