காரிமங்கலம், ஆக.22: காரிமங்கலம் பேரூராட்சி 6வது வார்டில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரிமங்கலம் பேரூராட்சி 6வது வார்டு அண்ணா நகர் பகுதியில், அரசு சார்பில் சுமார் 110 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய நிலம் பொது உபயோகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கன்வாடி, பள்ளி கழிவறை, குடிநீர் தொட்டிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, அதிகாரிகள் துணையுடன் சிலர் வீட்டுமனை பட்டாவாக மாற்றியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அங்கன்வாடிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், தனி நபர் ஒருவர் வீடு கட்டி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, மற்றொருவர் ஆக்கிரமித்து ஒரே நாளில் இரவில் தகர கொட்டாய் அமைத்ததால், அப்பகுதி மக்கள் கவுன்சிலர் நாகம்மாள் தலைமையில், நேற்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் பேரூராட்சி தலைவர் மனோகரன், செயல் அலுவலர் ஆயிஷா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, செயல் அலுவலர் ஆயிஷா, ஆர்ஐ மணி, விஏஓ.,க்கள் கணேசன், அசோக்குமார் ஆகியோர், அப்பகுதிக்கு சென்று போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் கொண்டு தகர கொட்டாயை அதிரடியாக அகற்றினர். அப்போது, ஒருவர் அந்த இடம் தனக்கு சொந்தமானது எனக்கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு, போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்பதுடன், அதற்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.