சேலம், ஜூலை 10:சேலம் மாவட்ட போலீசில் அதிகாரி முதற்கொண்டு போலீசார் வரை அனைவரும் உடல் பரிசோதனை செய்து அறிக்கை தர வேண்டும் என எஸ்பி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். கோவை சரக டிஐஜி விஜயகுமார், மனஅழுத்தத்தின் காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் காவல்துறையில் உள்ள அதிகாரிகள், போலீசார் என அனைவரும் மன அழுத்தமின்றி பணியாற்றி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில், அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள், தங்களுக்கு கீழ் பணியாற்றி வரும் போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இந்தவகையில், சேலம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் முதற்கொண்டு போலீசார் வரை அனைவரும் உடல் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட எஸ்பி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள 6 உட்கோட்ட டிஎஸ்பிக்கள், ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கு அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், \\”டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், சிறப்பு எஸ்ஐக்கள், ஏட்டுகள், போலீசார் என அனைவரும் வரும் 3 நாட்களுக்குள் தங்களது உடல் பரிசோதனையை மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு எந்த அளவு இருக்கிறது என்பதை பரிசோதித்து, அந்தந்த ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்களிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.
அதில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகளவு உள்ள போலீசாருக்கு மேல் சிகிச்சை தேவைப்படுகிறது என கண்டறிப்பட்டால், அந்த அறிக்கையை எனக்கு அளிக்க வேண்டும். அதனடிப்படையில், அந்த போலீசாருக்கு உரிய சிகிச்சையை அளிக்கவும், அவர்களின் உடல் நலனில் கவனம் கொள்ளவும் இயலும். எனவே அனைத்து போலீசாரும் உடல் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும்,’’ எனக்கூறியுள்ளார். இதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள சேலம் ரூரல், ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி, ஆத்தூர் ஆகிய 6 உட்கோட்டங்களில் பணியாற்றி வரும் போலீசார் அனைவரும் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் பரிசோதனையை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். வரும் புதன்கிழமைக்குள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள ஏற்பாடுகளை செய்துள்ளனர். எஸ்பி சிவக்குமாரின் இந்த நடவடிக்கையை போலீசார் வரவேற்றுள்ளனர்.