பெரம்பலூர், ஆக.31: போலீசாரை தாக்கியதாக 21 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிர்வாகிகள் 98 பேரை பெரம்பலூர் நீதிமன்றம் விடுதலை செய்தது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா ஒகளூர் கிராமத்தில் கடந்த 1998ம் ஆண்டு அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி நடத்த மங்களமேடு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகளூர் கிராமத்திற்கு சென்ற போலீசார், கட்சி நிர்வாகிகளை கைது செய்ய முயன்றபோது போலீசாரை தாக்கியதாக 98 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2003ம் ஆண்டு முதல் பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 1998ம் ஆண்டு கட்சி பொது செயலாளராக இருந்த தடா பெரியசாமி, மாவட்ட செயலாளராக இருந்த தங்கதுரை உள்பட 98 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்த போதும், 32 ஆண்கள் 35 பெண்கள் என மொத்தம் 67 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த 21 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி சங்கர், வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாரை தாக்கியதாக கூறப்பட்ட புகார்களுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை, வாகனங்களை எரித்ததாக கூறப்பட்ட புகார்கள் முரணாக உள்ளது. இந்த வழக்கில் இருந்து 98 பேர் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார்.