சேலம், அக்.26:சேலம்-நாமக்கல் மாவட்ட காவலர் கூட்டுறவு கடன் சங்கம் சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, சேலம், நாமக்கல்லை சேர்ந்த காவலர் முதல் எஸ்பி வரை 2,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் ₹2 ஆயிரம் பிடித்தம் செய்யப்படும். உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் ₹10 லட்சம் வரை கடன் கொடுக்கப்படும். இதுவரை ₹53 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வட்டியில் கிடைக்கும் லாபத்தொகையை, தீபாவளி நேரத்தில் உறுப்பினர்களுக்கு கொடுப்பது வழக்கம். ஒவ்வொருவருக்கும் ₹5 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை வழங்கப்படும். அத்துடன், ஒரு கிலோ இனிப்பு, அரை கிலோ காரமும் வழங்கப்படும்.
இந்த நிலையில், கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த இரண்டு மாதம் முன்பு முடிவடைந்து விட்டது. இதனால் இனிப்பு மற்றும் காரம் வழங்க இதுவரை கடைகளுக்கு ஆர்டர் கொடுக்க வில்லை. லாபத்தொகை கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் வரும் தீபாவளிக்கு இனிப்பு, காரம், பங்குத்தொகை கிடைக்குமா? என்ற கவலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘கூட்டுறவு சங்கத்தில் இருந்து வரும் லாபத்தொகையை வைத்து தான் குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்குவோம். இந்தாண்டு அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக லாபத்தொகையும் இனிப்பும் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.