நன்றி குங்குமம் டாக்டர்போலி மருத்துவர்கள் அவ்வப்போது பிடிபடுவதுபோல, போலி மருந்துகளும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் காய்ச்சல், வயிற்றுப்புண், கிருமித்தொற்று போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் மருந்துகளில் போலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் மருந்துகள், மாத்திரைகளை அரசு தர நிர்ணயம் செய்கிறது. இதற்கென மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் இயங்கி வருகின்றன. இந்த தரக்கட்டுப்பாட்டு வாரியங்களே ஆய்வின் அடிப்படையில் ஒரு மருந்தின் தரத்தை உறுதி செய்கின்றன. பல போலி மருந்துகள் இதுபோன்ற ஆய்வின்போதுதான் கண்டறியப்படுகிறது. இந்த வழக்கத்தின்படி ஜூலை மாதத்தில் 988 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 970 மருந்துகளில் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், குடற்புழு நீக்கம், வாயு அமிலப் பிரச்னை, கிருமித்தொற்று, வயிற்றுப் புண் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் 18 மருந்துகள் போலியாகவும் தரமற்றவையாகவும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளின் பட்டியல் https://cdsco.gov.in/ என்ற மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் மருந்து, மாத்திரைகளை மருத்துவர் அறிவுரை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் தானே மருந்துக்கடைகளில் சென்று மருந்துகள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.– அ.வின்சென்ட்
போலி மருந்துகள் உஷார்…
46
previous post