ஈரோடு, ஜூலை 29: போலி விளையாட்டுப் பயிற்சியாளர்களைக் கண்டறிந்து அவர்களது உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் நேற்று முன் தினம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தேசிய துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர் இலக்கிய செல்வன் தலைமையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேசிய கொடி ஏந்தி வந்து, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டுத்துறை அறிவிப்பின்படி ரூ.3 கோடி மதிப்பில் அமைய உள்ள மினி விளையாட்டு அரங்கில் ஈரோடு மாவட்டத்தில் இல்லாத ஒலிம்பிக் விளையாட்டுகளின் மைதானத்தை அமைக்க வேண்டும்.
எழுமாத்தூரில் உள்ள போலீஸ்துறை பயன்படுத்தும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை விளையாட்டு வீரர்களும் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். அரசு சார்பில் உலகத்தரம் வாய்ந்த அனைத்து விளையாட்டுக்களையும் உள்ளடக்கிய உள்விளையாட்டு அரங்கம் அமைத்துத்தர வேண்டும். தனியார் விளையாட்டு பயிற்சி மையங்களில் பயிற்சியளிக்கும் போலி பயிற்சியாளர்களை கண்டறிந்து அவர்களது உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் ஈரோடு மாவட்டத்தை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.