தேனி, செப். 3: ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தரையில் படுத்து போராட்டம் நடத்தினர். ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தில் நடு தெருவில் குடியிருப்பவர் நடராஜ் (70). இவரது மகள் விஜயசாரதி நேற்று விஜயசாரதி தனது தந்தை நடராஜ் மற்றும் தனது அண்ணி மற்றும் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு அளித்தார். பின்னர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டரின் காரின் முன்பாக முதியவர் நடராஜை கீழே படுக்க வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கு திருமணம் முடிந்து கணவனால் கைவிடப்பட்டு ஒரு மகனுடன் தந்தை பராமரிப்பில் வாழ்ந்து வந்தேன்.
இந்த நிலையில் என் தந்தை நடராஜ் விபத்தில் சிக்கி இடுப்பு பகுதியில் பலத்த காயம் அடைந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டார். எங்களது பூர்வீக சொத்தான பிச்சம்பட்டியில் உள்ள தந்தைக்கு உரிய பாகமான சுமார் 23 சென்ட் நிலத்தை விற்பனை செய்ய முற்பட்டபோது அந்த நிலத்தை ராமசுந்தர் என்பவர் போலி ஆவணம் மூலம் பத்திர பதிவு செய்திருந்தது தெரியவந்தது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்தினை மீட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தியே வேறு வழியில்லாமல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருப்பதாக தெரிவித்தார் இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விஜய சாரதியிடம் ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார் . இதில் கோரிக்கை குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திரும்பி சென்றனர்.