கோவை, நவ.13: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் மண்டல மேலாளராக பணியாற்றி வரும் ஜெபசீலன் சாம்ராஜ் என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக ரஷியா பேகம் பணி புரிந்து வருகிறார். மேலும், நிஷாந்தினி, ராஜலட்சுமி ஆகியோர் இந்த நிதி நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளராக உள்ளனர்.
இந்நிலையில் கோவையை சேர்ந்த குமரேசன்(34), அவரது மனைவி நாகதர்ஷினி மற்றும் சரவணன் ஆகியோர் கடந்த ஆண்டு 505 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.21 லட்சத்து 90 ஆயிரம் கடன் பெற்றனர். தணிக்கை நடைபெற்றபோது 505 கிராம் தங்க நகைகளில் 205 கிராம் போலி நகைகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.
அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.21.90 லட்சம் மோசடி செய்த குமரேசன், அவரது மனைவி நாகதர்ஷினி ஆகியோரை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.