வேலூர், நவ.20: அங்கீகாரமற்ற அமைப்புகள் போலியாக குத்துச்சண்டை போட்டிகளை நடத்தி ஏழை மாணவர்களிடம் பணம் பறிக்கும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் அதன் நிர்வாகிகள் கலெக்டர் சுப்புலட்சுமியிடம் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தற்போது விளையாட்டுத்துறையில் உலகளவில் தமிழக வீரர்கள் பலர் தொடர்ந்து பதக்கங்களை பெற்று வருகின்றனர். அதேசமயம் வடமாநிலங்களில் நடைமுறையில் உள்ள சொசைட்டி ஆக்ட் பதிவுகளை கொண்டு பல்வேறு என்ஜிஓ அமைப்புகள், பல விளையாட்டு பிரிவுகளில் பல்வேறு பெயர்களில் போலியான விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர். அதேபாணியில் வேலூரில் சில அமைப்புகள் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் அனுமதி பெறாமல் போலியான பதிவில் பெயரில் வரும் 22, 23, 24ம் தேதிகளில் போட்டிகள் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் போட்டி நடத்தும் அமைப்பு நுழைவு கட்டணமாக ₹500 பெற்று போலிச் சான்றுகளையும், பரிசுகளையும் வழங்க உள்ளதாகவும் தெரிகிறது. இச்சான்றுகளை வைத்து தமிழக அரசின் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டையும் பெற முடியாது. எனவே, அங்கீகாரமற்ற இந்த அமைப்புகளால் ஏழை மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க கடந்த 11ம் தேதி தமிழக முதல்வர், விளையாட்டுத்துறை அமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளோம். மேலும் கலெக்டரிடமும் மனு அளித்துள்ளோம். தற்போதும் மனு அளித்துள்ளோம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலி குத்துச்சண்டை போட்டிகள் நடத்தி ஏழை மாணவர்களிடம் பணம் பறிப்பதை தடுக்க வேண்டும் வேலூர் மாவட்ட குத்துச்சண்டை சங்கம் கலெக்டரிடம் புகார் அங்கீகாரமற்ற அமைப்புகள்
0