நெல்லை, ஆக. 29: போலி ஆவணம் மூலம் உரிமையாளருக்கு தெரியாமல் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். வள்ளியூர் அருகே வடக்கு கள்ளிகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு முன்னீர்பள்ளம் அருகே கோபாலசமுத்திரம். பிராஞ்சேரி பகுதியில் 64 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தனது நிலத்தை விற்பனை செய்ய முயன்ற போது அது வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து கடந்த 24ம் தேதி நெல்லை எஸ்பி அலுவலகத்தில் இது குறித்து அவர் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜென்சி மேற்பார்வையில் எஸ்ஐ சோபியா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் நெல்லை, வண்ணார்பேட்டை, வெற்றி விநாயகர் தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து (40) என்பவர் போலி ஆவணம் மூலம் ராமகிருஷ்ணனின் 64 சென்ட் நிலத்தை ரூ.30 லட்சத்துக்கு வேறு ஒருவருக்கு விற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுடலைமுத்துவை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.