சேலம், அக். 5: சேலம் மாவட்டம் கருமாபுரத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘கருமாபுரம் அடுத்த தென்சோலை பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் 90 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு 30 ஏக்கர் விவசாய நிலம் பஞ்சமி நிலமாக வழங்கப்பட்டது. தற்போது வரை அங்கு விவசாயம் செய்து வரும் நிலையில், எங்களது நிலம் வேறு சிலரின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எங்களது பெயருக்கே மீண்டும் நிலத்தை பதிவு செய்து தர வேண்டும்,’’ என்றனர்.