தண்டையார்பேட்டை, ஜூன் 11: புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ் (47) இவருக்கு சொந்தமான இடம் புதுவண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் உலகம்மாள் என்பவர் பெயரில் உள்ளது. இந்நிலையில், திருவொற்றியூர் காலடிப்பேட்டை பத்மநாபா காலனி 2வது தெருவைச் சேர்ந்த பாஜ வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி முன்னாள் செயலாளர் சாமுண்டீஸ்வரி (39) என்பவர், கடந்த மே மாதம் இந்த நிலத்தின் மீது போலி கிரைய பத்திரம், சொத்து வரி ஆகியவற்றை தயாரித்தார். மேலும், மின்வாரியத்தில் உலகம்மாள் பெயரில் உள்ள மின் அட்டையில் சாமுண்டீஸ்வரி என்ற பெயரில் மாற்றி தர விண்ணப்பித்திருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜோசப்ராஜ் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சாமுண்டீஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த 8ம் தேதி சாமுண்டீஸ்வரியை போலீசார் கைது செய்து ஸ்டான்லி மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த குறைபாடு இருப்பதாக கூறி உள் நோயாளிகள் பிரிவில் அனுமதித்தனர். இதையடுத்து, மருத்துவ சிகிச்சை முடிந்த நிலையில், சாமுண்டீஸ்வரியை போலீசார் நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.