கடலூர், ஆக. 15: கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலை கல்லூரி உள்ளது. இங்கு சுமார் 4000 மாணவ, மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பயின்று வருகின்றனர். கடந்த வாரம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும். அடையாள அட்டை அணிந்து வரவேண்டும். ஒழுங்காக தலை முடிகளை வெட்டி வரவேண்டும், என கல்லூரி நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் 2ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் 4 பேர், தலைமுடியை ஒழுங்காக வெட்டாமல் கல்லூரிக்கு வந்துள்ளனர். இதை பார்த்த கல்லூரி முதல்வர் அந்த மாணவர்களை அழைத்து அவர்களின் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டார். மேலும் தலைமுடியை ஒழுங்காக வெட்டி வந்து, விளக்க கடிதம் கொடுத்த பின்னரே, அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு கல்லூரிக்கு வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவர்கள் முடியை ஒழுங்காக வெட்டாமல் மீண்டும் கல்லூரிக்கு அடையாள அட்டை அணிந்து வந்துள்ளனர்.
இதை பார்த்த பேராசிரியர்கள் சந்தேகம் அடைந்து, அந்த 4 மாணவர்களை அழைத்து அடையாள அட்டையை சோதனை செய்தபோது, அது போலியாக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டை என்பது தெரிய வந்தது.
இது குறித்து பேராசிரியர்கள், கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதை பார்த்த அவர் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில், மாணவர்கள் வெளியில் இருந்து போலி அடையாள அட்டை தயாரித்து அணிந்து வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் 4 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.