ஊட்டி, ஆக. 6: ஊட்டி ஒய்எம்சிஏ மற்றும் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் ஹிரோசிமா தினம் போர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. புவி தோன்றிய நாள் முதல் இன்று வரை நடைபெற்ற போரில் உயிரிழந்தோருக்கு மெழுகு வர்த்தி தீபங்களுடன் பள்ளி மாணவ, மாணவியரின் அமைதி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. வயலின் இசை கலைஞர் ஜோசுவா ரோசனின் மெல்லிசைக்கு பின்பு சர்வ மத பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
சத்ய சாய் சேவா சமிதி தொண்டர் ராசு பெட்டன், டிரினிடி தேவாலய அருட் சகோதரர் ஜெர்ரி ராஜ்குமார், பாம்பே காசில் பள்ளிவாசல் நிர்வாகி ரிஸ்வான், பஹாய் சமய பிரதிநிதி பெகரூஸ், புலவர் சோலூர் கணேசன், ஜனார்தனன் பங்கேற்றனர். முன்னதாக, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. ஒய்எம்சிஏ பள்ளி செயலர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயப்பிரகாஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துணைத்தலைவர் தன சிங் வரவேற்றார். பள்ளி மாணவ மாணவியரின் அமைதிப் பாடல் பாடப்பட்டது.