திருவாடானை, ஜூலை 3: திருவாடானை அருகே பழுதடைந்த போர்வெல்லை பழுது நீக்கி சீரான குடிநீர் வழங்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். திருவாடானை அருகே நெய்வயல் ஊராட்சி, சீர்தாங்கி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சீர்தாங்கி கண்மாய் பகுதியின் அருகில் உள்ளூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த போர்வெல் மூலம் செல்லும் குடிநீரானது சீர்தாங்கி பகுதி மட்டுமின்றி, கருமொழி ஜம்பு வழியாக தொண்டி பேரூராட்சி வரை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு இந்த போர்வெல் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத சூழல் நிலவுவதால் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதிக்கு வாகனம் மூலம் டேங்குகளில் கொண்டு வரப்படும் குடிநீரை ஒரு குடம் 15 ரூபாய் கொடுத்து வாங்கும் அவலநிலை உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் இந்த பழுதடைந்த போர்வெல்லை உடனடியாக பழுதுநீக்கி தடையின்றி சீரான குடிநீர் வழங்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.