பூந்தமல்லி, ஆக.5: திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் குமரன் (53), இவரது மனைவி விஜயலட்சுமி, அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குமரன், போருர் காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு போரூர் சட்டம், ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராக மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் பைக் மற்றும் ஆட்டோ ரேஸ் நடக்கிறதா என மொபெட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். போரூர் சுங்கச்சாவடி அருகே சென்ற போது தாம்பரத்தில் இருந்து போரூர் நோக்கி பைக் ரேசில் ஈடுபட்டவர், தலைமைக் காவலர் குமரன் வாகனத்தின் மீது வேகமாக மோதினார். இதில், தலைமைக் காவலர் குமரன் மற்றும் ரேசில் ஈடுபட்டவர் ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர்.
இதில், குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக் ரேசில் ஈடுபட்டவர், பாதுகாப்பு ஆடை அனிந்து இருந்ததால் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணையில் அவர், அண்ணா நகரை சேர்ந்த சத்திய சாய்ராம் (23) என்பது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் இறந்த தலைமைக் காவலர் குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலையில் ரேஸ் நடக்கிறதா என ரோந்து பணியில் இருந்த தலைமைக் காவலர் ரேஸ் பைக் மோதி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.