கோவை, ஆக. 31:கோவை உக்கடம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேரூர் பைபாஸ் ரோடு மீன் மார்க்கெட் அருகே சந்தேகம்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்தபோது அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்ற கெம்பட்டி காலனியை சேர்ந்த சிவகுரு (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் ராமநாதபுரம் சிவராம் நகர் ஜங்சன் அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட திருச்சி ரோடு ஹைவே காலனியை சேர்ந்த ஜான்ஜோசப் (33), பீளமேட்டை சேர்ந்த அஜித்குமார் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, 140 போதை மாத்திரை, 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. வேலாண்டிபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த சரவணகுமார் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா, ஒரு கத்தி, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.