போரூர், ஜூன் 10: போதை பொருள் விற்ற வழக்கில் தலைமறைவான நைஜீரியன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை அசோக் நகர் பகுதியில் மெத்தாம்பெட்டமின் விற்ற வழக்கில், கடந்த 1ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ராயப்பேட்டையைச் சேர்ந்த செல்வராஜ்(26), கஜேந்திரன்(32), பைசல் நூர்(30), கே.ேக.நகரைச் சேர்ந்த விக்னேஷ்(25), எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த இர்பான்(26) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 46.7 கிராம் கொக்கைன், 6.88 கிராம் மெத்தாபெட்டமின் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே கண்ணமங்கலம் பகுதியில் தங்கியுள்ள நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஆண்டினி ஓக்போ ஒகோரோ(32) மற்றும் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த தர்ஷன்(எ)தட்சிணாமூர்த்தி(25) ஆகியோரிடம் இருந்து போதைப் பொருட்கள் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, போதைப் பொருள் விற்பனை வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இதையடுத்து, தனிப்படை போலீசார் நைஜீரியன் நாட்டைச் சேர்ந்த ஆண்டனி ஓக்போ ஒகோரோ, காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும், 12.42 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.