ஆரணி, மே 26: ஆரணி அருகே பழைய இரும்பு கடையில் போதை பொருள் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆரணி அடுத்த இரும்பேடு, ஆதனூர், வெள்ளேரி ஆகிய கிராமங்களில் உள்ள பழைய இரும்பு கடை மற்றும் ஓட்டலில் ஹான்ஸ், குட்கா உட்பட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையில் எஸ்எஸ்ஐ குமார் மற்றும் போலீசார் இரும்பேடு, ஆதனூர் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள இரும்பு கடை, ஓட்டலில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல், கூல்லிப் உட்பட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. விசாரணையில், இரும்பேடு அரிகரன் நகரை சேர்ந்த இரும்பு கடை உரிமையாளர் சையத்பாபு(47), ஆதனூர் இலப்ப மரத்தெருவை சேர்ந்த அருண்குமார்(28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், கடையில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ் என்பவர் போதை பொருட்களை கொண்டு வந்து அவர்களுக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து, தாலுகா போலீசார் வழக்கு பதிந்து சையத்பாபு, அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சந்தோஷை வலைவீசி தேடி வருகின்றனர்.