பாப்பாரப்பட்டி, ஆக.15: பாப்பாரப்பட்டியில், மாமரத்துபள்ளம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.கல்லூரி முதல்வர் பாக்கியமணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக டிஎஸ்பி மகாலட்சுமி கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு தொடர்பான உரை நிகழ்த்தி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கதிர்வேல் வரவேற்றார். போதைப்பொருள் தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழியை முன்மொழிய, மாணவர்கள் தொடர்ந்து கூறி, உறுதிமொழி ஏற்றனர். கல்லூரியின் தமிழ் துறை மாணவர்கள், போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். மாணவி வசந்தி, போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து பாப்பாரப்பட்டி கீழ் பஸ் நிலையத்தில் இருந்து, தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபம் வரை, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.