கிருஷ்ணகிரி, ஆக.12: போதை பொருட்கள் தடுப்பு குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கலெக்டர் அறிவுரை வழங்கினார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக கூட்டரங்கில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை வகித்தார். பர்கூர் மதியழகன் எம்எல்ஏ, மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அப்போது, கலெக்டர் சரயு பேசியதாவது: தமிழக அரசு போதை பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. போதை பொருள் பயன்படுத்துபவர்கள், அதற்கு முழுமையாக அடிமையாகி, அதில் மூழ்கி விடுகிறார்கள். போதை பொருட்களால் மூளையின் செயல்பாடு குறைகிறது. மனநிலை பாதிக்கப்படுகிறது. கோபம் அதிகரிக்கிறது. இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. சமூகத்தின் நச்சாக விளங்கும் போதை பொருட்களை முற்றிலும் அழிக்க வேண்டும். போதை பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்தும், போதை பொருட்கள் தடுப்பு குறித்தும் மாணவ, மாணவிகளிடம் போதிய விழிப்புணர்வை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
தொடர்ந்து, போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. முன்னதாக, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டிஆர்ஓ ராஜேஸ்வரி தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சிகளில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வேடியப்பன், உதவி ஆணையர்(ஆயம்) சுகுமார், ஆர்டிஓ பாபு, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.பூவதி, துணை முதல்வர் டாக்டர். சாத்விகா, டிஎஸ்பி தமிழரசி, தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி, வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணன், நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, மற்றும் அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.