மதுரை, ஆக. 26: மதுரை கோ.புதூர் காவல்துறை சார்பில் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் முகமது ரபி மாணவர்கள் போதை பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீங்குகளையும், பாதிப்புகளையும் எடுத்து கூறினார். எஸ்ஐ முத்துக்குமார் பேசுகையில், தங்கள் வீட்டின் அருகிலோ, பள்ளியின் அருகிலோ போதைப்பொருட்கள் விற்பதோ பயன்படுத்து வதோ தெரியவந்தால் போலீசாரிடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில், உதவி தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன், ரஹ்மத்துல்லா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர்கள் போதை பொருட்களை ஒழிப்போம் வளமான இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றனர்.