கோவை, ஜூலை 29: போதை பொருள் தடுப்பு குறித்து கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘போலீஸ் புரோ’ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. கோவை மாநகர போலீசார் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இடையே பரவும் போதை பொருள் பழக்கத்தை ஒழிக்க தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். கோவை முழுவதும் ‘ட்ரக்ஸ் ப்ரீ கோவை’ என்ற திட்டம் மூலம் போலீசார் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே மாணவிகளின் பிரச்னையை தீர்க்க ‘போலீஸ் அக்கா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது மாணவர்களின் பிரச்னையை தீர்க்கவும், போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘போலீஸ் புரோ’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை நவஇந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். உடன் துணை போலீஸ் கமிஷனர் சண்முகம் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பலர் இருந்தனர். இந்த திட்டம் குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘போலீஸ் புரோ’ திட்டத்தில் 15 போலீஸ் ஸ்டேஷன்களில் தலா ஒரு எஸ்.ஐ நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்களிடம் போதைப்பொருள் பழக்கம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
மாநகரில் உள்ள 83 கல்லூரிகளிலும் போலீசார் சுழற்சி முறையில் சென்று வருவார்கள். இந்த திட்டத்தின் மூலம் போலீசார் மற்றும் மாணவர்கள் இடையே சகஜமான நிலையை உருவாக்கி போதை பொருள் விற்பனையை ஒழிக்க முடியும் என்று நம்புகிறோம். மேலும் மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அது குறித்தும் போலீசாரிடம் தெரிவித்து தீர்வு காணலாம்’ என்றனர்.