கோவை, ஆக. 13: தமிழ்நாடு முதல்வர் தலைமையில் சென்னைலிருந்து காணொலி காட்சி வாயிலாக வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி 800 மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு, போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டலக்குழு தலைவர் தெய்வயானை தமிழ்மறை, வேளாண் பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன், பயிர் மேலாண்மை இயக்குநர் கலாராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பொருளாதார ரீதியாக வளர்ச்சிடையவும், உயர்ந்த வாழ்க்கை தரத்தை அடைவதற்கும் இந்த பொருளதார வளர்ச்சி என்பது அவசியமாகும்.
தமிழ்நாடு தற்போது பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக உயர்ந்துள்ளதற்கு நம்மிடம் உள்ள மனிதவளமும் முக்கிய காரணமாகும். இந்த வளத்தை மேம்படுத்துவதற்கு தான் நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இளைஞர்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு போதை பழக்கங்கள் சீரழிக்கின்றன. அதனால் அரசு சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் கூடும் வணிக வளாகங்கள், திருவிழாக்கள் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் காவல் துறை மற்றும் பல்வேறு அரசு துறைகள் இணைந்து செயல்படுத்துகின்றன. மாணவர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். மாணவர்கள் உறுதிமொழி எடுத்தால் போதாது, உங்களை சார்ந்தவர்களுக்கும், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் போதை பொருட்கள் எதிர்ப்பு கிளப் உருவாக்க வேண்டும். அனைவரும் அதில் கலந்து கொள்ள வேண்டும். போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.