கிருஷ்ணகிரி, ஜூலை 5: கிருஷ்ணகிரியில், போதைபொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கினார். புதிய நிலையம் அருகே, தொடங்கிய பேரணி, லண்டன்பேட்டை வழியாக, ராயக்கோட்டை மேம்பாலம், ராயக்கோட்டை ரோடு வழியாக அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முடிவுற்றது. இப்பேரணியில் மாணவ, மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்பேரணியில், வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், உதவி ஆணையர் பழனி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.