பந்தலூர், ஜூன் 25: பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பந்தலூர் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு சார்பில் பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான பிரபாகரன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் நாமும் அழிந்து சமுதாயமும் அழிந்து விடும்.
போதை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தெரிய வந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என்றார். தொடர்ந்து போக்சோ சட்டம் குறித்தும் அதன் பாதிப்புகள் குறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்வில் தேவாலா டிஎஸ்பி ஜெயபால், இன்ஸ்பெக்டர் ரோஸ்லின், குழந்தை பாதுகாப்பு அலுவலர் பாமா, தலைமை ஆசிரியர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.