மேட்டூர், ஜூன் 18: மேட்டூர் பஸ்நிலைய சைக்கிள் ஸ்டேண்டில் நகராட்சி பணியாளர் போதையில் மயங்கியதால், வாகனம் நிறுத்திய பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.மேட்டூரில் நகராட்சி பஸ்நிலையம் உள்ளது. மேட்டூரிலிருந்து கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி செல்லும் மக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் தங்களது டூவீலர், சைக்கிள்களை நகராட்சி சைக்கிள் ஸ்டேண்டில் நிறுத்தி செல்கின்றனர். மேட்டூர் நகராட்சியில் பஸ்நிலைய திறப்பு விழா நடந்து 2 மாதங்கள் ஆன நிலையில் சைக்கிள் ஸ்டேண்ட் ஏலம் விடப்படவில்லை. ஏல வைப்புத்தொகை மற்றும் ஆரம்ப ஏலத்தொகை அதிகமாக இருப்பதால் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. நகராட்சி நிர்வாகமே நகராட்சி பணியாளர்களை வைத்து கட்டணம் வசூலித்து வருகிறது. நிரந்தர பணியாளர்கள் மூவர் நியமனம் செய்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நேற்று பகலில் பணியில் இருந்த பணியாளர் ஒருவர் மது போதையில் மயங்கி கிடந்தார். அப்போது, டூவீலரை நிறுத்திச்சென்ற பொதுமக்கள் தங்கள் டூவீலரை எடுக்க வந்தபோது ஆள் இல்லாததால் மிகவும் அவதிக்குள்ளானார்கள். பின்னர் நகராட்சியில் புகார் செய்து சுமார் 40 நிமிடம் கழித்து நகராட்சி பணியாளர் ஒருவர் வந்தார். அவர் பொதுமக்களின் டூவீலர்களை வெளியே எடுக்க உதவினார். நகராட்சி நிர்வாகத்தை நம்பி தங்களின் டூவீலரை நிறுத்திச்சென்றால் நகராட்சி பணியாளர் போதையில் மயங்கி கிடக்கிறார், தங்களின் வாகனம் திருடப்பட்டால் யார் பொறுப்பு என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
நாள் ஒன்றுக்கு சுமார் 200 டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன. இதில் வசூல் பணிக்கு 3 பணியாளர்களை நகராட்சி நிர்வாகம் அனுப்பி விட்டால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேட்டூர் பஸ்நிலைய சைக்கிள் ஸ்டேண்டில் பாதுகாப்பு இல்லாததால் தனியார் நடத்தும் சைக்கிள் ஸ்டேண்டுகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனர். சரியான வைப்புத்தொகை மற்றும் ஏலத்தொகையை கூறி சைக்கிள் ஸ்டேண்டை ஏலம் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.