குடியாத்தம், நவ.17: குடியாத்தத்தில் குடிபோதையில் இளம் பெண் ரகளையில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் அறைகள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மண்டப அலுவலகத்திற்கு குடிபோதையில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். திடீரென மேசையில் இருந்த பொருட்களை தூக்கி எறிந்து அங்கிருந்தவர்களிடம் வீண் தகராறு செய்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி, குடிபோதையில் இருந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவரை வீட்டிற்கு ஆட்டோ மூலம் அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் போலீசார் நடத்திய விசாரணையில், போதையில் ரகளை செய்த பெண் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருவது தெரியவந்தது. பெண் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.