சேலம், மே 20: சேலம் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக, புதிதாக பொறுப்பேற்ற உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் தெரிவித்தார். சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக இருந்த கதிரவன், சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பெரம்பலூரில் பணியாற்றி வந்த கவிக்குமார், சேலம் மாவட்ட நியமன அலுவலராக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஏற்கனவே நாமக்கல், விருதுநகர், திருவள்ளூர் மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். இதையடுத்து சேலம் வந்த அவர், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் கவிக்குமார் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு மாம்பழ சீசன் களைகட்டியுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள குடோன்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசு அனுமதித்துள்ள விதிகளுக்கு மாறாக, ரசாயனங்களை தெளித்து மாம்பழங்களை பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாவட்டம் முழுவதும் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 120 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ததாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் நேரடி சோதனையின் மூலம் 70 கடைகளும், காவல்துறையின் வழக்குப்பதிவின் அடிப்படையில் 88 கடைகளும் என மொத்தம் 158 கடைகள் மூடப்பட்டுள்ளன.இவ்வாறு கவிக்குமார் தெரிவித்தார்.