சேந்தமங்கலம், ஜூன் 18: சேந்தமங்கலத்தில் நடந்த போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் மதுவிலக்கு பிரிவு ஏடிஎஸ்பி கலந்துகொண்டு பேசினார்.
சேந்தமங்கலத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் கோவிந்த ராசன் தலைமை வகித்தார். நாமக்கல் மதுவிலக்கு பிரிவு ஏடிஎஸ்பி தனராசு கலந்து கொண்டு விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
பள்ளி -கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தெரியவந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் சிறந்த சமுதாயத்தை உருவாக்க கல்வி தான் ஒரே வழி. எனவே, இதுபோன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல், தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக பெண்கள், தங்களது செல்போனில் போலீஸ் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, தங்களுக்கு பாலியல் சீண்டல் தொந்தரவுகள் இருந்தால், உடனடியாக அதன் மூலம் தகவல் தெரிவித்தால், அடுத்த சில நிமிடங்களில் போலீசார் அங்கு வந்து விடுவார்கள்.
மேலும் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல்கள், டீக்கடை போன்றவற்றில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்கக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல் தெரிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.