காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், எஸ்பி சண்முகம், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குன்றத்தூர்: குன்றத்தூர் காவல் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று குன்றத்தூரில் நடந்தது. குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியை குன்றத்தூர் நகர் மன்ற தலைவர் சத்தியமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான பள்ளி மாணவர்கள் பேண்டு, வாத்தியங்கள் இசைத்தபடி போதைப்பொருள் தடுப்பு குறித்த வாசகங்களை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
கொல்லச்சேரியில் உள்ள அரசுப்பள்ளி வரை பேரணி சென்றது. அப்போது, பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பேச்சு போட்டி நடந்தது. நிகழ்வில் நகரமன்ற ஆணையர் ராணி, குன்றத்தூர் காவல் ஆய்வாளர் வேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.