சென்னை, ஆக.3: போட் கிளப் முதல் கோடம்பாக்கம் வரையிலான சுரங்கம் தோண்டும் பணி அக்டோபர் மாதம் தொடங்கி 2024 செப்டம்பர் மாதம் நிறைவடையும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 3வது வழித்தடத்தில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
இந்த பணிகளை 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை என 26.1 கிலோ மீட்டர் தொலைவில் நான்காம் வழிதடம் அமைய உள்ளது. இதில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் வரையில் என 16 கிலோ மீட்டருக்கு இரண்டு தொகுப்புகளாக பிரித்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற உள்ளது. அதற்காக, நான்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. சென்னை மெரினா கடற்கரையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக பயன்படுத்தப்பட உள்ள இயந்திரத்தின் சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் போட் கிளப்பில் இருந்து கோடம்பாக்கம் வரை சுரங்கம் தோண்டும் பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது இயந்திரத்தின் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது.
இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் தோராயமாக 4 கி.மீ. நீளத்திற்கு இரட்டை சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. மேல் மற்றும் கீழ் சுரங்கங்கள் இரண்டையும் கருத்தில் கொண்டு தோராயமாக 16 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை முழுவதையும் தோண்டுவதற்கு 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளன. 700 மெட்ரிக் டன் எடையுள்ள இந்த இயந்திரம் தனித்தனி பாகமாக பிரிக்கப்பட்டு சென்னை தியாகராய நகர், பனகல் பார்க் கொண்டுவரப்பட்டு அக்டோபர் மாதத்தில் சுரங்கம் தோண்டுவதற்கான பணிகள் தொடங்கும்.
பூமிக்கு அடியில் 26 மீட்டர் ஆழத்தில் கீழ் நிலையில் தொடங்கப்பட்டு போட் கிளப், நந்தனம், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் வழியாக சுரங்கம் செய்யப்பட்டு இறுதியாக 2024 செப்டம்பர் மாதத்தில் கோடம்பாக்கம் மேம்பாலம் வந்தடையும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ஐடிடி சிமென்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் பயன்படுத்தப்படும் இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், பல்வேறு வகையான சுரங்கப்பாதைகளுக்கான சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை தயாரிப்பதில் முன்னோடியான ஹெரென்க்னெக்ட் என்ற புகழ்பெற்ற ஜெர்மன் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.