‘‘திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் தாமரை கட்சியினர் கரன்சி மழை இல்லாத காரணத்தால் வறட்சியில் தள்ளாடுறாங்களாமே. இந்த வறட்சி தொடர்ந்தால், தாமரை கருகிவிடும் என்கிறார்களே நிர்வாகிகள் அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘திருவாரூர், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தாமரை கட்சியின் நிர்வாகிகள் தங்களிடம் இருந்த ‘விட்டமின் ப’ அனைத்தையும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றை பிரமாண்டமாக நடத்தி கரைத்து விட்டார்களாம். காரணம், மேலிடம் கரன்சியை இறைக்கும் பிடித்து கொள்ளலாம் என்ற எண்ணம்தான் காரணமாம். ஆனால், நினைத்ததற்கு மாறாக மேலிடத்தில் இருந்து சல்லி காசு உரியவர்களுக்கு போய் சேரவில்லையாம். இதனால, தாமரை கட்சி நிர்வாகிகள் பெரும்பாலனோர் ‘விட்டமின் ப’ இல்லாமல் கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த முடியாமல் திணறி வருகிறார்களாம். இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய தொண்டர்களை அழைத்து செல்லக் கூட கரன்சி இல்லையாம். கடன் வாங்கி செல்லவும் மனசு ஒப்பவில்லையாம். கரன்சி வந்தால் நிகழ்ச்சி, இடைத் தேர்தல் பிரசாரம், இல்லையென்றால் தற்காலிகமாக கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கலாம்னு முடிவு செய்துள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனி மாவட்டமே காலியாக இருக்காமே… அங்கிருந்து மாயமானவர்கள் கரன்சியில் குளிக்கிறார்களாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியின் விஐபி மாஜி ஈரோடு இடைத்தேர்தலில் அதிக எண்ணிக்கையில் ஓட்டை பெற வேண்டும் என்பதில் குறியாக உள்ளாராம். இதனால பூத் வாரியாக நிர்வாகிகளை நியமிச்சு, வீடு வீடா ஓட்டு சேகரிக்கணும். பத்து வீட்டுல 20 ஓட்டு இருந்தா அதுல 15 ஓட்டு நம்ம கட்சிக்கு விழணும். நீங்க என்ன செய்வீங்கணு தெரியாது என்று சொல்லியிருக்கிறாராம். இதற்காக மற்ற மாவட்டங்களில் இருந்து இலை கட்சியினரை மாஜி அமைச்சர்களான ‘பெல்’ தரப்பில் ஆட்கள் வந்து இருக்காங்களாம். இருந்தாலும், மாங்கனி மாவட்டத்துல மாநகர், புறநகருன்னு ரெண்டு மாவட்டம் இருக்குது. இங்குள்ள நிர்வாகிகள் அனைவரும் ஈரோட்டில் முகாமிட்டிருக்காங்க. எலெக்சன் முடியும் வரை யாரும் என்னை பார்க்க வரக்கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்காராம். இலை கட்சிக்காரங்க யாரும் சேலத்துல இருக்கக் கூடாது. யார் மூலமாவது தகவல் கிடைத்தால் தொலைச்சுடுவேன்னு எச்சரித்து இருக்கிறாராம். இதனால மாங்கனி மாநகர இலை கட்சியினர் விஐபியின் வீடு இருக்கும் நெடுஞ்சாலை நகர் பக்கம் வருவதே இல்லையாம். ஆனா அதையும் தாண்டி எம்எல்ஏ ஒருவர் நெடுஞ்சாலை நகர் வீட்டுப்பக்கம் போய் வெள்ளையும் சொள்ளையுமா எட்டிப்பார்த்திருக்காரு. ஏற்கனவே சின்னம் கிடைக்காம நொந்துபோய் இருக்கும் மாஜி ரொம்பவே டென்சன் ஆகிட்டாராம். ‘இங்கு எதுக்கு வந்த’ என தொடங்கிய அவர் கடும் வார்த்தையால் வறுத்து எடுத்துட்டாராம்… எல்லாம் இடைத்தேர்தல் செய்யும் இடைஞ்சல் என்று நொந்தபடி சொன்றாராம், இலை கட்சிக்காரர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்… நீ அழுவுற மாதிரி அழு என்ற பார்முலாவை யார் கையில் எடுத்து, யாரை எரிச்சல் படுத்துறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கதர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு கூட்டணி கட்சியினர் தினமும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வர்றாங்க. ஆனால், இலை கட்சியில் சேலம்காரர் அணியில் இன்னும் வேட்பாளரை செலக்ட் செய்யும் குழப்பம் முடிந்தபாடில்லை. இன்னைக்கு, நாளைக்கு என வேட்பாளர் பெயர் அறிவிப்பு தள்ளிப்போயிட்டு இருக்காம். இலை கட்சியில் மற்றொரு அணியான தேனிக்காரர் தரப்பிலும் இன்னும் வேட்பாளர் அறிவிக்காம இருக்காங்க. இந்த சூழலில் குக்கர் அணி திடீரென்று வேட்பாளரை அறிவிச்சு தொகுதியில் விசில் சத்தம் பறக்க விட்டிருக்காங்க. தேனிக்காரர் தரப்பினருக்கும், குக்கர் அணிக்கும் அண்டர் கிரவுண்டில் டீல் இருக்குதாம். அதேபோல, தேனிக்காரருக்கும் தாமரை தரப்புக்கும் ரகசிய உறவு தொடர்கிறதாம். மகன் மூலமாக தேனிக்காரர் டெல்லி தொடர்பில் இருக்கிறாராம். தேனியில் உள்ள தந்தையோ, உள்ளூர் தாமரை தலைவர், குக்கர், சின்ன மம்மி தொடர்பில் இருந்து வருகிறாராம். இவர்களின் ஆலோசனை படி தான் தேனிகாரர் போட்டி என்று அறிவித்தாராம். மேலும், தேனிக்காரர் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்தால், சேலம்காரர் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை அறிவிக்க உள்ளாராம். ஓட்டு சிதறி சேலம்காரர் டெபாசிட் போக வேண்டும். தன் அணி அதிக ஓட்டு வாங்க வேண்டும் என்பது ஒரு பார்முலா. இரண்டாவது பார்முலா சேலம்காரருக்கு இலை சின்னமே கிடைக்க கூடாது என்று காய் நகர்த்தி வருகிறாராம். அதற்கான வேலைகளை தேனிகாரரின் மகன் டெல்லியில் இருந்து பார்த்து வருகிறாராம். எல்லாம் மூவர் பார்முலாவை பயன்படுத்தி, சேலம்காரரை இடைத்தேர்தலோடு காலி செய்ய தான் இந்த பிளானாம். அப்புறம் இன்னொரு பேச்சும் ஈரோடு கிழக்குல ஓடுது, தேனிக்காரர் தரப்பில வேட்பாளர் அறிவிச்ச ஓரிரு நாளில் குக்கர் அணி வேட்பாளர் வாபஸ் பெற வாய்ப்பு இருக்காம். காரணம், சேலத்துக்கு எதிராக ஓட்டு சிதறக்கூடாது என்ற எண்ணம்தானாம். இந்த தேர்தல் மூலமா எடப்பாடி அணிக்கு பயத்த காட்டியே ஆகனும்னு முடிவு செய்திருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரசு அதிரடி காட்டியும் ஹைவே ஓட்டல் வசூலை நிறுத்தாத புட் சேப்டி அதிகாரி யாரு…’’ என்று கேள்வி கேட்டார் பீட்டர் மாமா.‘‘விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் அதிகளவிலான ஹைவே ஓட்டல்கள் உள்ளது. இந்த ஓட்டல்களில் அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் நின்று செல்வதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கிறதாம். ஆனால் உணவில் தரம்தான் இல்லையாம். இதனை பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய புட் சேப்டி மாவட்ட அதிகாரிக்கு சரியாக கப்பம் கட்டுவதால் அந்த பக்கமே தலை வைப்பதில்லையாம். பெயரிலேயே சுகத்தை வைத்துள்ள அவர் தற்போது பணத்தின் சுகத்தை நன்றாக அனுபவித்து வருகிறாராம். சமீபத்தில் தரமில்லாத ஓட்டலில் அரசு பேருந்து நிற்கக்கூடாது என்று அரசு உத்தரவு போட்டபிறகும் அந்த ஓட்டலில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லையாம். அதுமட்டுமா, ஏற்கனவே டாக்டராக பணிபுரிந்து சொந்த ஊரிலேயே பணிபுரிவதால், உள்ளூர் கடைகளில் கலப்படம் தொடர்பாக புகார் வந்தாலும் எல்லாம் நண்பர்கள், சொந்த பந்தங்களாக இருக்கிறதே என்று வெளிப்படையாகவே பேசி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. …