போடி, பிப். 14: போடி அருகே, போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த இ-சேவை மைய உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சிலமலை தெற்கு சூலப்புரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது தந்தை மற்றும் தாய் இறந்துவிட்டனர். இதையடுத்து போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டியை சேர்ந்த ராஜ்குமார் நடத்தி வரும இ-சேவை மையத்தில் வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு வேலுச்சாமி விண்ணப்பித்தார். இதற்காக வேலுச்சாமியிடம் ரூ.13 ஆயிரத்து 500ஐ ராஜ்குமார் பெற்றுள்ளார்.
ஆனால் பணத்தை பெற்ற ராஜ்குமார், இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்களை போலியாக தயார் செய்து வேலுச்சாமியிடம் கொடுத்துள்ளார். இதனை வேலுச்சாமி அறியவில்லை. இந்நிலையில் இரு சான்றிதழ்களையும் சரி பார்ப்பதற்காக, போடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேலுச்சாமி சென்றுள்ளார். அங்கு தாசில்தார் சந்திரசேரன் ஆய்வு செய்தபோது, அவை போலியானவை என தெரியவந்தது. இது தொடர்பாக தாசில்தார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ மணிகண்டன், ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.