போடி, அக். 27: போடி அருகே மேல சொக்கநாதபுரம் கால்வாயை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போடி அருகே கொட்டகுடி ஆற்றில், தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேல சொக்கநாதபுரம் மீனாட்சிபுரம் இடையே உள்ள கால்வாய்களில் செடி கொடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மண் கழிவுகளால் வெள்ளநீர் வெளியேறாமல் அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்ததால் தோட்டப்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் மேல சொக்கநாதபுரம் மீனாட்சி புரம் இடையே சுந்தரராஜபுரம் ஒத்த மரம் பிரிவில் உள்ள கால்வாய் பகுதியில், ஜேசிபி இயந்திரத்துடன் தூர் வாரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.