போடி, மார்ச் 10: போடியில் கார் மோதி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோயில் அருகில் குடியிருப்பவர் செந்தில்குமார் (37). இவரது மகன் ஹரிதேவ் ராயப்பன்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி 8ம் வகுப்பு படித்து வந்தார். சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் ஊருக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஊருக்கு வந்தவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஷ் மகன் முகேஷ் என்பவருடன் ஆடு மேய்ப்பதற்காக போடி-தேனி ரோடு, அணைக்கரைப்பட்டி பகுதிக்கு சென்றார்.
அங்கு இரட்டை புளியமரம் அருகில் சாலையை கடக்க முயன்ற போது, போடி நோக்கிச் சென்ற கார் ஹரிதேவ் மீது மோதியது. இதில் அவர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போடி புறநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டிவந்த சென்னை பள்ளிக்கரணை பாரதியார் தெருவை சேர்ந்த பத்மநாபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.