போடி, செப். 4: போடி அருகே கவுன்சிலரை மிரட்டிய தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பெருமாள் கவுண்டன்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழ்வாணன்(48). இவர் அம்மாபட்டி கிராம ஊராட்சியில் வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மாமியார் உமா என்பவர் அப்பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார்.
அந்த வீட்டிற்கு ஊர் பொதுக் குழாயில் இருந்து டியூப் பொருத்தி மோட்டார் வாயிலாக தண்ணீர் பிடித்துள்ளார். தமிழ்வாணன் அதைப் பார்த்து கண்டித்துள்ளார். இதனால் தமிழ்வாணன் மீது உமாவுக்கு விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், உமாவின் மகள் அனுசுயா மற்றும் மருமகன் ஈஸ்வரன் ஆகியோர் தமிழ்வாணன் வீட்டு முன்பு நின்று அவரை அவதூறாக பேசி அங்கிருந்த கல்லுக்கால்களை சேதப்படுத்தினர். மேலும் அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் தமிழ்வாணன் புகார் செய்தார். எஸ்.ஐ கோதண்டராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.